கடலூர்: இ-பாஸ் நடைமுறை இருந்தால் தான் யார் எங்கு செல்கிறார்கள் என்பதை கண்டறிய முடியும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
கரோனா தடுப்பு பணிகள் குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். பின்னர், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, பள்ளிக்கல்வித்துறை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் கால்நடை பராமரிப்புத் துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை ஆகிய துறைகளின் சார்பில் 32 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பில் 22 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி, மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத்துறை, சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, கூட்டுறவுத் துறை துறைகளின் சார்பில் 25 கோடியே 54 லட்சம் மதிப்பீட்டில் 33 முடிவுற்ற திட்ட பணிகளை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "தமிழ்நாடு அரசு கரோனா தொற்றை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கரோனா பாதிப்பாளர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இ-பாஸ் நடைமுறை இருந்தால் தான் யார் எங்கு செல்கிறார்கள் என்பதை கண்டறிய முடியும். மக்களின் உயிர்காக்கும் விவகாரத்தில் அரசு பின்பற்றும் வழிமுறைகளை மாற்றம் செய்ய முடியாது" என்றார்.
இதையும் படிங்க: 'அரியர் மாணவர்களின் அரசனே' - முதலமைச்சருக்கு கட்அவுட் வைத்த அரியரியன்ஸ்!