நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பொறியாளர்கள் இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாகவும், தமிழர்கள் குறைந்த அளவில் தேர்வுசெய்யப்பட்டுள்ளதால் என்எல்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் நெய்வேலி பெரியார் சிலை அருகில் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் கணேசன், நெய்வேலி சபா. இராசேந்திரன், புவனகிரி சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், “என்எல்சி இந்தியா நிறுவனம் மிகப்பெரிய பொதுத் துறை நிறுவனமாக இருந்துவருகிறது. கடலூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், என்எல்சி நிறுவனத்தின் வளர்ச்சிக்காகத் தங்கள் வீடு நிலங்களைக் கொடுத்து என்எல்சி நிறுவனம் நவரத்னா அந்தஸ்து வருவதற்கு முக்கியக் காரணமாக இருந்துள்ளனர்.
ஆனால் என்எல்சி நிறுவனத்தில் தொடர்ச்சியாக கடந்த ஜந்து ஆண்டுகளாக வடமாநில இளைஞர்களைப் பணியில் அமர்த்தும் முறைகேடு நடைபெற்றுவருகின்றது.
இந்நிலையில் தற்போது நடைபெற்ற தேர்வில் 1,582 பேர் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள தேர்ச்சிப் பெற்றுள்ள நிலையில், அதில் எட்டு பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இந்தத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதை இது காட்டுகிறது. தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்துசெய்ய கூறுவதுபோல், என்எல்சி இந்தியா நிறுவனம் கேட் தேர்வு நடத்துவதை ரத்துசெய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'யாரும் யாருக்கும் அடிமை இல்லை'- உறுதியேற்ற ஓபிஎஸ்