மக்களவைத் தேர்தலையொட்டி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவோம். இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் தமிழக நலன் பாதுகாக்கப்படும். கச்சத் தீவு மீட்கப்படும்.
தற்போதைய தேர்தல் நடைமுறையை மாற்றி, விகிதாசார பிரதிநிதித்துவ முறையை அமல்படுத்த முயற்சி செய்யப்படும். இதன் மூலம், ஒவ்வொரு கட்சியும் வாக்கு விழுக்காட்டிற்கு ஏற்ப தமக்கான பிரதிநிதிகளை நாடாளுமன்றம், சட்டப் பேரவை, சட்ட மேலவைகளில் பெறுவதற்கு வாய்ப்பு உருவாக குரல் கொடுப்போம்.
மின்னணு வாக்கு இயந்திர முறைக்கு பதிலாக வாக்குச் சீட்டு முறையைக் கொண்டு வர வலியுறுத்துவோம். மேலும், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணி நாள்களை 200-ஆக உயர்த்துதல், வறுமைக்கோடு உச்ச வரம்பு உயர்வு, விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம், தமிழை ஆட்சி மொழியாக்குவது, தலித் மற்றும் பழங்குடியினருக்கு தனி வங்கி, ஜிஎஸ்டி வரி முறை ஒழிப்பு, விவசாயக் கடன் ரத்து, விவசாயத்துக்கு தனி பட்ஜெட் ஆகியவையும் வலியுறுத்தப்படும்.
வருமான வரித்துறை மூலம் கிடைக்கும் வருவாய் ஆறு விழுக்காடு மட்டுமே. அதன் அலுவலக பணிக்கே அந்தத் தொகை செலவிடப்படுவதால், அந்தத் துறையை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தப்படும். பெட்ரோலியப் பொருள்களின் விலைக் கட்டுப்பாடு அதிகாரத்தை மீண்டும் அரசே ஏற்பது, ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து கல்வித் துறைக்கு நிதியை உயர்த்தி வழங்குவது, கார்ப்பரேட், தனியார் மயத்தைக் கைவிடுதல், பிஎஸ்என்எல் உள்ளிட்ட அரசுத் துறை நிறுவனங்களைப் பாதுகாத்தல், நீதித் துறையில் இடஒதுக்கீடு, சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆகியவை குறித்தும் வலியுறுத்தப்படும்.
மாநில சுயாட்சிக்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே நியமனம் செய்ய வலியுறுத்தப்படும். காவிரி உள்ளிட்ட நதிநீர் பிரச்னைகளை தீர்க்க தனி அமைச்சகம், கல்விக் கடன், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது" என தொல்.திருமாவளவன் கூறினார்.