கடலூர்: கடலூர் அருகே உள்ள நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மாணவர்களை அழைத்துக்கொண்டு, தனியார் பள்ளிவேன் மார்ச் 3ஆம் தேதியான இன்று காலை வழக்கம்போல் வருகைபுரிந்துகொண்டு இருந்தது.
அப்போது, அந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வீட்டுச்சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த நிலையில், உடனடியாக அருகில் உள்ள மக்கள் வேனில் உள்ள மாணவர்களைக் காப்பாற்றினர். அப்போது 12 மாணவர்களும் சிறுகாயமின்றி உயிர் தப்பிய நிலையில் ஓட்டுநர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள், வேன் ஓட்டுநர் பிரபு (43) திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
நெல்லிக்குப்பம் காவல் துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கையில், வேன் ஓட்டிக்கொண்டிருக்கும்போதே, ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். அதன்பிறகே கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் நல்வாய்ப்பாக, பயணித்த 12 மாணவர்களும் காயமின்றி உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'பேச்சுவார்த்தைக்கு நாங்க தயார்' - ரஷ்யா அறிவிப்பு