சிதம்பரம் வ.உசி. தெருவைச் சேர்ந்த லதா என்ற பெண் பக்தர் கடந்த சனிக்கிழமையன்று சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வழிபடச் சென்றார். அப்போது, முக்குறுணி விநாயகர் சன்னதியில் பூஜையில் இருந்த அர்ச்சகர் தர்ஷன், லதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை கன்னத்தில் அறைந்தார்.
சம்பவம் குறித்து லதா அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர காவலர்கள், அர்ச்சகர் தர்ஷன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்தச்சூழ்நிலையில், கோயில் அர்ச்சகரைக்கண்டித்தும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து இதுவரை அவரை கைது செய்யாத காவல்துறையைக் கண்டித்தும் சிதம்பரம் காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திராவிடர் கழகம் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன், " பெண் பக்தரை தாக்கிய அர்ச்சகர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை இதுவரை அவரை கைது செய்யவில்லை. தமிழ்நாடு அரசின் இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது.
சிதம்பரம் கோயிலை பொறுத்தவரை இங்குள்ள அர்ச்சகர்கள் தட்டில் காசு போடுவதற்கு ஏற்பவே தீபாராதனை செய்வார்கள். இவற்றையெல்லாம் போக்க சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையே ஏற்று நடத்த வேண்டும். பக்தர்கள் தட்டில் காசு போடாமல் உண்டியலில் காணிக்கை செலுத்தும் நடைமுறையை பின்பற்ற வேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: ’பாலில் நச்சுத்தன்மை மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ - ராஜேந்திர பாலாஜி