கடலூர்: கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷுக்குச் சொந்தமான முந்திரி ஆலையில் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி இரவு சந்தேகத்திற்கிடமான முறையில் தொழிலாளி கோவிந்தராஜ் உயிரிழந்தார்.
இந்த வழக்கை காவல் துறையினர் விசாரித்துவந்த நிலையில் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோமதி தலைமையில் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ், அவரது ஊழியர்கள் ஐந்து பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஊழியர்கள் நடராஜன், கந்தவேல், அல்லாபிச்சை, வினோத், சுந்தராஜன் ஆகியோர் கைதுசெய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் தலைமறைவாக இருந்தார்.
இந்த நிலையில் இன்று (அக். 11) பண்ருட்டி நடுவர் நீதிமன்றத்தில் ரமேஷ் சரணடைந்தார். சரணடைந்த பின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில், "என்னுடைய முந்திரி தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளி கோவிந்தராஜ் என்பவரது மரணம் தொடர்பாக சிபிசிஐடி என் மீது பதிவுசெய்துள்ள முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக வைத்து திமுக மீது சில அரசியல் கட்சிகள் தங்களுக்கு உரித்தான அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தவறான பரப்புரையை மேற்கொண்டிருப்பது என் மனத்திற்கு நெருடலாகவும், இந்த இயக்கத்தின் தொண்டர்களில் ஒருவனாக இருக்கும் எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.
ஆகவே நான் உயிரினும் போற்றும் என் தலைவரின் நல்லாட்சியின் மீது வீண் பழிபோடுபவர்களுக்கு மேலும் இடம் கொடுத்துவிட வேண்டாம் எனக் கருதி சிபிசிஐடி பதிவுசெய்துள்ள வழக்கில் நான் நீதிமன்றத்தில் சரண் அடைகிறேன். என்மீது சுமத்தப்பட்டுள்ள புகார் ஆதாரம் அற்றது என்பதைச் சட்டத்தின் முன்பு உரிய ஆதாரங்களுடன் நிரூபித்து வெளியே வருவேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: முந்திரி ஆலை தொழிலாளி கொலை: திமுக எம்பி ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரண்