கடலூர்: தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கிய 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு, வருகிற 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அந்த வகையில், இன்று (ஏப்ரல் 13) 10ஆம் வகுப்பு கணித பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில், கடலூர் வண்டிப்பாளையத்தைச் சேர்ந்த ஆதிலட்சுமி என்ற மாணவி, கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு தேர்வெழுதி வருகிறார்.
இதனிடையே வாட்ச்மேனாக பணிபுரிந்து வந்த மாணவியின் தந்தை ரவி, நேற்று (ஏப்ரல் 12) மாலை திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதால், கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். தொடர்ந்து நேற்று நள்ளிரவு ரவி, சிகிச்சைப் பலன் இன்றி உயிரிழந்தார். இதனை அறிந்த மகள் ஆதிலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இருப்பினும், இன்று 10ஆம் வகுப்பு கணித பாடத்தேர்வு நடைபெறுவதாக இருந்ததால், ஆதிலட்சுமி காலையில் தேர்வு எழுத பள்ளிக்கு வந்தார். அப்போது மாணவியின் தோழிகள் மற்றும் ஆசிரியர்கள் அவருக்கு ஆறுதல் கூறினர். இதனைத் தொடர்ந்து மாணவி ஆதிலட்சுமி, தேர்வு எழுதி விட்டு வீட்டுக்குச் சென்றார்.
இதையும் படிங்க: TANCET, CEETA-PG தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது!