பெப்சி நிறுவன தயாரிப்புகளில் ஒன்றான `லேஸ் சிப்ஸ்’ தயாரிப்பதற்கு 'FL 2027 OR FC 5' என்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட புதிய வகை உருளைக்கிழங்கை பயன்படுத்தி வருகின்றனர்.
அதனை, பயிர் பாதுகாப்பு, விவசாயிகள் உரிமைச் சட்டத்தின்படி 2016இல் பெப்சி நிறுவனம் காப்புரிமையைப் பெற்றிருக்கிறது.
இதனையடுத்து, தாங்கள் காப்புரிமை பெற்றுள்ள உருளைக்கிழங்கு வகைகளை குஜராத் மாநில விவசாயிகள் நான்கு பேர் பயிர் செய்துள்ளனர்.
இதனால் தங்களுக்குக் கடுமையான பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்கிறது எனக் கூறி விவசாயிகள் நான்கு பேர் மீது பெப்சி நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் தலா ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து, இந்தியாவில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவர் மாதவன் தலைமையில் கடலூர் அண்ணாபாலம் அருகே விவசாயிகள் லேஸ் பாக்கெட்களை கீழே கொட்டி எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், லேஸ், பெப்சி நிறுவனத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர். விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இப்போராட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.