கடலூர் கம்மியம்பேட்டை பராசக்திகோயில் தெருவைச் சேர்ந்த சங்கரலிங்கம் என்பவரின் மகன் சுரேஷ் (38). ஆட்டோ ஓட்டுநரான இவர், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்திற்குள் தனது ஆட்டோவுடன் சென்றுள்ளார். அங்கு ஆட்டோவை நிறுத்தி தன்னிடம் இருந்த பெட்ரோலை எடுத்து ஆட்டோ மீது ஊற்றி தீ வைத்தார். பின்னர் அவரும் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் ஓடி வந்து ஆட்டோவில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இதில் ஆட்டோவின் மேல் கூரை மட்டும் எரிந்து சேதமானது. இச்சம்பவத்தால் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அவரை மீட்டு கடலூர் புதுநகர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவருக்கு ரேஷன் கார்டு இல்லாததால் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியவில்லை என்றும் அரசு வழங்கிய ரூ.1000 நிவாரண நிதியும் தனக்கு கிடைக்கவில்லை எனவும் மேலும் கடன் பெற்று ஆட்டோ வாங்கி இருந்ததால் கரோனா ஊரடங்கால் போதிய வருமானம் இல்லாததால் தவணையையும் கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ஆட்டோவை தீ வைத்து கொளுத்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரியவந்தது.
இதையும் படிங்க: 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் மீது பாய்ந்த போக்சோ!