இது குறித்து கடலூர் ஆட்சியர் அன்புச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "கடலூர் மாவட்டம், வடலூர் அருட்பிரகாச வள்ளலார் 149ஆவது தைப்பூச திருவிழா நாளை (பிப். 08) நடைபெறுகிறது. இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஜோதி தரிசனத்தை கண்டுகளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மண்டபங்களில் அன்னதானம் செய்பவர்களும், வாகனங்களில் கொண்டுவந்து அன்னதானம் செய்பவர்களும் உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். தைப்பூச விழா நடைபெறும் 08.02.2020 அன்று வடலூரில் மீன்கடைகள் உட்பட அனைத்து இறைச்சி கடைகளும் மூட வேண்டும். மேலும், சுற்றுப்புறத்தில் பன்றிகளை மேய விடக்கூடாது.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க விரும்புவோர், வடலூர் வள்ளலார் தெய்வநிலையத்தில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலரிடம் பதிவு செய்ய வேண்டும். உணவு விடுதிகள், அன்னதான கூடங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். தெரு ஓரங்களில் விற்பனை செய்யப்படும் உணவு பண்டங்களை பேப்பர் கொண்டு மூடி வைத்து வியாபாரம் செய்ய வேண்டும்.
இனிப்பு பண்டங்கள், பழங்கள் போன்றவற்றை ஈ மொய்க்காமலும், தெரு புழுதி படாமலும் மூடி வைக்க வேண்டும். பஜ்ஜி, போண்டா, வடை போன்றவைகள் தயாரிக்கும் போது ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது.
செயற்கை வண்ணங்களை சேர்த்து உணவு பொருட்கள் தயாரிப்பதை தவிர்க்க வேண்டும். தேநீர் கடைகளில் தரமான டீ தூளை பயன்படுத்தி தேநீர் தயாரிக்க வேண்டும். தேநீர் கிளாஸை கொதிநீர் கொண்டு கழுவ வேண்டும். உணவுப் பொருட்களை தயாரிப்போரும், கையாள்வோரும், கையுறை அணிய வேண்டும். காலாவதியான உணவு பொருட்களையும் லேபிள் விவரங்கள் இல்லாத உணவு பொட்டலங்களையும் விற்பனை செய்யக் கூடாது.
தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்டுள்ள 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களான
1. உணவு பொருட்களை கட்ட உபயோகிக்கும் நெகிழித்தாள்.
2. உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் நெகிழித்தாள்.
3 நெகிழியிலான தெர்மாகோல் தட்டுகள்
4.நெகிழி பூசப்பட்ட காகித தட்டுகள்
5. நெகிழி பூசப்பட்ட காகித குவளைகள்
6. நெகிழி தேநீர் குவளைகள்
7. நெகிழி குவளைகள்
8. தெர்மாகோல் குவளைகள்
9. நீர் நிரப்பபடும் பைகள் / பொட்டலங்கள் நெகிழியால் உறிஞ்சு குழல்கள்
11.நெகிழி பைகள் ( எந்த அளவிலும், எந்த தடிமனாக இருப்பினும்)
12. நெகிழி பூசப்பட்ட பைகள்
13. நெகிழி கொடிகள் 14. நெய்யாத நெகிழி பைகள் ஆகியவைகளை கட்டாயம் பயன்படுத்த கூடாது". இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ”ஞாபகம் வருதே ஞாபகம் வருதே...” மிட்டாய் குதூகலத்தில் 90’ஸ் கிட்ஸ்..!