கடலூர் மாவட்டம் கொக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர் ஜூன் 23ஆம் தேதி இரவு மனைவி தீபா உடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத கும்பல் கனகராஜின் வீட்டின் உள்ளே புகுந்து அவரது மனைவி அணிந்திருந்த ஐந்து பவுன் நகையை பறித்து சென்றது. இது தொடர்பாக ஆலடி காவல் நிலையத்தில் கனகராஜ் புகார் தெரிவித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் ராஜதாமரை பாண்டியன், விசாரணை மேற்கொண்டார்.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட விருத்தாச்சலம் பகுதியைச் சேர்ந்த வெள்ளையன் என்பவரின் மகன் ராமசாமி(55), பாபு, மருதாயி ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இதில் முக்கிய குற்றவாளியான ராமசாமி மீது உளுந்தூர்பேட்டை காவல் நிலைத்தில் ஒரு கொலை வழக்கும், சென்னை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
எனவே, இவரின் குற்றச் செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சந்திர சேகர் சாகமூரி ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதன் பேரில் ராமசாமி குண்டர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.