ஐதராபாத்: நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-க்கு 0 என்ற கணக்கில் முழுவதுமாக இழந்து ஒயிட் வாஷ் ஆனது இந்திய அணி. இதனிடையே இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி, அங்கு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.
பார்டர் கவாஸ்கர் தொடரை 4-க்கு 0 அல்லது 5-க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றினால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா நேரடியாக தகுதி பெறும் முடியும். இந்த இரண்டில் ஒன்று நடக்க தவறினால் கூட இலங்கை, நியூசிலாந்து உள்ளிட்ட மற்ற அணிகளின் முடிவுகளுக்கு இந்தியா காத்திருக்க வேண்டி வரும்.
அதேநேரம் பார்டர் கவாஸ்கர் டிராபியுடன் இந்திய அணியின் மூன்று முக்கிய ஜாம்பவான்கள் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் யார், அப்படி ஓய்வு பெறும் நிலையில், அவர்களுக்கு மாற்றாக யார் களமிறங்கினால் சரியாக இருக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரோகித் சர்மா:
சொந்த மண்ணில் நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் கண்ட தோல்வி ரோகித் சர்மாவின் டெஸ்ட் கேப்டன்சிக்கே ஆபத்தாக அமைந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரும் சொதப்பும் பட்சத்தில் அவர் அணியில் இருந்து ஓரங்கட்டப்படுவார் அல்லது ஓய்வு பெற்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்.
இருப்பினும் 2027 உலக கோப்பை வரை ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் தொடர்ந்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அண்மையில் நடைபெற்ற டி20 உலக கோப்பையுடன் 20 ஓவர் பார்மட்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெற்றார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ரோகித் சர்மா ஓய்வு பெறும் நிலையில், அவரது இடத்திற்கு மேற்கு வங்கத்தை சேர்ந்த அபிமன்யு ஈஸ்வரன் சரியான தேர்வாக இருப்பார் என கூறப்படுகிறது.
100க்கும் மேற்பட்ட முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள அபிமன்யு ஈஸ்வரன் 49.40 சரசாரி கொண்டுள்ளார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மாவின் இடத்தை அபிமன்யு ஈஸ்வரன் பூர்த்தி செய்வார் எனக் கூறப்படுகிறது.
விராட் கோலி:
இரண்டாவதாக விராட் கோலி. அண்மைக் காலமாக ரன் குவிப்பதில் சிரமப்பட்டு வரும் விராட் கோலியும், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் கடைசி கட்டத்தை நெருங்கிவிட்டார் எனக் கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக சர்பராஸ் கான் சிறந்த தேர்வாக இருப்பார் எனக் கூறப்படுகிறது. அபிமன்யு ஈஸ்வரன் போன்று சர்பராஸ் கானும் அணிக்காக ரன் குவிக்கக் கூடிய வீரராவார். ஏற்கனவே அவருக்கு 6 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அணுபவமும் உள்ளது என்பதால் அவர் சிறந்த தேர்வாக இருப்பார் எனக் கூறப்படுகிறது.
ரவிச்சந்திரன் அஸ்வின்:
தமிழக வீரரான அஸ்வின் ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார். கடைசியாக 2022ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக டி20 போட்டியிலும், கடந்த ஆண்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டிலும் அஸ்வின் விளையாடி இருந்தார். அதன்பின் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது வரை அஸ்வின் பந்துவீச்சில் இந்திய அணிக்காக தனது சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறார். இருப்பினும், அவர் ஓய்வு பெறும் நிலையில் அவருக்கு பதிலாக மற்றொரு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் சிறந்த தேர்வாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நியூசிலாந்து தொடரில் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக பந்து வீசினார். அதேநேரம் ரவீந்திர ஜடேஜாவுக்கு மாற்றாக குல்தீப் யாதவ் இருக்கக் கூடும்.
இதையும் படிங்க: இந்தியாவை தாண்டி சவுதி அரேபியாவில் ஐபிஎல் மெகா ஏலம் நடத்த என்னக் காரணம்? பிசிசிஐ போடும் திட்டம் என்ன?