அமெரிக்க அதிபர் தேர்தல் 2024 (US President Election 2024) மீது தான் இன்று உலக மக்களின் கண்கள் இருக்கின்றன. இந்த நிலையில், அந்நாட்டு மக்கள் அதிபரை நேரடியாகத் தேர்ந்தெடுப்பதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? அதற்குப் பதிலாக, "எலக்டோரல் காலேஜ்" என்ற அமைப்பு வாயிலாக அதிபர் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த அமைப்பு, ஒவ்வொரு மாநிலத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான "எலக்டோரல் வாக்குகளை" ஒதுக்குகிறது.
இதற்கு முன்னதாக தற்போதைய 2024 தேர்தலில் யார் யார் போட்டியிடுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வோம். இந்த அதிபர் தேர்தலில் குறைந்த வரி, அரசின் அதிகாரத்தைக் குறைப்பது, துப்பாக்கி உரிமை, குடியேறிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் ஆகிய கொள்கைகளைக் கொண்டிருக்கும் குடியரசுக் கட்சியின் சார்பாக டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.
மற்றொருபுறம், சிவில் உரிமைகள், பரந்த அளவிலான சமூகப் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் ஆகிவற்றை முக்கியக் கொள்கைகளாக வைத்திருக்கும் ஜனநாயகக் கட்சியின் சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். தற்போது தேர்தல் முடிந்து நடைபெற்றுவரும் வாக்கு எண்ணிக்கையில் டிரம்ப் முன்னிலை வகித்து வருகிறார். இந்த நேரத்தில், தான் வெற்றிபெற்று விட்டதாக டொனால்டு டிரம்ப் மக்களிடத்தில் பிரகடனப்படுத்தியுள்ளார்.
எனவே, அதிபரைத் தேர்ந்தெடுக்கும் எலக்டோரல் காலேஜ் என்றால் என்ன, இவர்கள் ஒதுக்கும் எலக்டோரல் வாக்குகள் எப்படி கணக்கிடப்படுகிறது என்றும் இதைவைத்து அமெரிக்க அதிபர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்றும் இந்த தேர்தலில் வேறு யாரெல்லாம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும் விரிவாகப் பார்க்கலாம்.
அதிபர் தேர்தலில் யார் யாரெல்லாம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
யார் அதிபர் என்பதிலேயே மக்கள் அதிகம் கவனம் செலுத்தினாலும், இந்த தேர்தலில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 435 இடங்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபைக்கும், செனட் சபையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களுக்கும் தேர்தல் நடைபெறும். கடந்த தேர்தலில் பிரதிநிதிகள் சபையில் குடியரசு கட்சியினர் பெரும்பான்மையாக இருந்த நிலையில், செனட் சபையில் ஜனநாயக கட்சி ஆதிக்கம் செலுத்தியது நினைவுக்கூரத்தக்கது.
இந்த இரண்டு அவைகளிலும் பெரும்பான்மையாக உள்ள கட்சி அதிபரின் திட்டங்களுக்கு முரண்பட்டால், அவற்றை செயல்படுத்துவதில் அதிபர் பிரச்சினைகளை சந்திப்பார். குறிப்பாக டிரம்ப் ஆட்சிகாலத்தில் சட்டவிரோதமாக குடியேறுவோரைத் தடுக்க, எல்லையில் ‘மெக்சிகோ சுவர்’ கட்டவேண்டும் என டிரம்ப் அரசு அடம்பிடித்தது. ஆனால், எதிர்கட்சிகள், மக்கள், உலக நாடுகளின் பெரும் எதிர்ப்பால், இத்திட்டம் நிறுத்திவைக்கப்பட்டது.
எலக்டோரல் வாக்குகள் எவ்வாறு ஒதுக்கப்படுகின்றன?
ஒவ்வொரு மாநிலத்திற்கும் உள்ள எலக்டோரல் வாக்குகளின் எண்ணிக்கை, அந்த மாநிலத்தின் மக்கள்தொகையைப் பொறுத்தது. உதாரணமாக, கலிபோர்னியா போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலத்திற்கு 55 எலக்டோரல் வாக்குகள் உள்ளன. வயோமிங் போன்ற குறைந்த மக்கள்தொகை கொண்ட மாநிலத்திற்கு 3 எலக்டோரல் வாக்குகள் மட்டுமே உள்ளன.
எலக்டோரல் காலேஜ் எவ்வாறு செயல்படுகிறது?
- மக்கள் வாக்களிப்பு: அதிபர் தேர்தலில், மக்கள் தாங்கள் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிக்கின்றனர்.
- எலக்டோரல் வாக்குகள் எண்ணப்படுகின்றன: ஒவ்வொரு மாநிலத்திலும், அதிக வாக்குகள் பெறும் வேட்பாளர், அந்த மாநிலத்தின் அனைத்து எலக்டோரல் வாக்குகளையும் பெறுகிறார். இதனை "வின்னர் டேக்ஸ் ஆல்" (Winner takes all) முறை என்கிறோம்.
- வெற்றியாளர் அறிவிக்கப்படுகிறார்: 538 எலக்டோரல் வாக்குகளில், 270 அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெறும் வேட்பாளர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
இதையும் படிங்க |
எலக்டோரல் காலேஜ் சர்ச்சைகள்?
எலக்டோரல் காலேஜ் முறை சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளன. சில நேரங்களில், ஒரு வேட்பாளர் நாடு முழுவதும் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தாலும், எலக்டோரல் வாக்குகளில் குறைவாகப் பெற்றுத் தோல்வியடைய நேரிடும்.
எடுத்துக்காட்டாக 2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஹிலாரி கிளிண்டன் டொனால்ட் டிரம்பை விட அதிக வாக்குகளைப் பெற்றார். ஆனால், டிரம்ப் அதிக எலக்டோரல் வாக்குகளைப் பெற்று அதிபரானார் என்பது வரலாறு.
எலக்டோரல் காலேஜ் என்பது அமெரிக்க அதிபர் தேர்தலின் ஒரு முக்கிய அங்கமாகும். இது, ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் மக்கள்தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவத்தை வழங்குகிறது. இருப்பினும், இது சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.