கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, வடலூர், நெய்வேலி, விருத்தாசலம் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்துவருகிறது. மழையால் பல இடங்களில் நீர் தேங்கி நிற்கின்றது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகிவருகின்றனர்.
இந்நிலையில், கடலூர் அடுத்த பெரியகங்கணாங்குப்பம் பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் அப்பகுதியில் மழைநீர் வெள்ளம்போல் வீடுகளில் சூழ்ந்தது. தெருகளில் கழிவுநீருடன் மழைநீரும் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
வீடுகளில் சூழ்ந்துள்ள கழிவுநீரை அகற்ற நகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து ஆத்திரம் அடைந்த அந்தப் பகுதியினர் கடலூர் - புதுவை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரம் பொதுமக்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல் துறையினர் பொதுமக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர். மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: சாலையில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்! போக்குவரத்து துண்டிப்பால் பொதுமக்கள் அவதி!