மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்கள், கண்டிப்பாக நீட் தேர்வு எழுத வேண்டும் என மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்தது. இத்தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே மருத்துவ படிக்க முடியும் என்ற நிலை உருவானது. இன்று நாடு முழுவதும் பாதுகாப்பான முறையில் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை, கடலூர் உட்பட 14 மாவட்டங்களில் நீட் தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்பட்டது. கடலூரில் முதல்முறையாக அமைக்கப்பட்ட 12 மையங்களில் 5,789 மாணவ மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் அரியலூர் மற்றும் பிற மாவட்ட மாணவர்களும் வந்து தேர்வு எழுதுகின்றனர். இந்நிலையில், வெளிமாவட்டத்தில் இருந்து தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு பொதுவான போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்து தரவில்லை என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குற்றம்சாட்டினர். மேலும், தேர்வு மையத்தை கண்டுபிடிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டதாகவும் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விடப்பட்டதால் தேர்வு மையங்களில் போதுமான மின்சாரம், குடிநீர் வசதிகள் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
கடலூரில் ஒரு தேர்வு மையத்திற்கு தலா ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் 95 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.