கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் அண்ணாமலை ஈடிவி பாரத் செய்திகளுக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அதில் அவர், "எல்லாருக்கும் சுத்தமான குடிநீர் இலவசமாக வழங்கப்படும். 50 லட்சம் பேருக்கு 5 ஆண்டுகளில் நல்ல வேலைவாய்ப்பை பெருக்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும். வேலைவாய்ப்பு பெருக்குவதற்கு திறன் மேம்பாட்டு மையம் தமிழகம் முழுவதும் 500 இடங்களில் திறக்கப்படும். கடந்த ஒரு வார காலமாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது மக்களின் எழுச்சியும் கோபமும் ஆதங்கமும் தெரிந்தது.
கிராமங்களில்கூட இதனை பார்க்க முடிகிறது. மக்களை சந்தித்த வரையில் அவர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏதுமில்லை, அவர்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்னைகளை சரிசெய்ய வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள். எங்கே பார்த்தாலும் குடத்தை தூக்கிக் கொண்டு செல்கிறார்கள். அனைவருக்கும் நல்ல குடிநீர் கிடைக்க வேண்டும். குடிசை இல்லாத தமிழகம் உருவாக்கப்பட வேண்டும். இதே மாதிரிதான் அவர்களுடைய எதிர்பார்ப்பு உள்ளது. அதற்கான முக்கியத்துவம் மக்கள் நீதி மய்யம் சார்பில் கொடுக்கப்படும்.
கடலூரில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் வெவ்வேறு பிரச்னைகள் உள்ளன. கடலூரில் அரசு மருத்துவக் கல்லூரி இல்லை என்று பலரும் நினைக்கின்றனர். பண்ருட்டி பகுதியில் முந்திரி பலா ஏற்றுமதிக்கான ஏற்பாடுகள் வேண்டுமென நினைக்கிறார்கள். ஆண்ட கட்சிகள் ஆளுகின்ற கட்சிகள் ஏதும் செய்யவில்லை. மக்கள் நீதி மய்யத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கடலூர் தொகுதியில் எனக்கு வாய்ப்பு கிடைத்தால் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்.
கடலூரை தமிழகத்தின் முதல் நிலை மாநிலமாக மாற்றுவதற்கு முயற்சி செய்வேன். எனக்கு இன்னொரு கனவும் உள்ளது. கடலூரில் (special economic zone) சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அது வந்து விட்டால் அனைத்து நிறுவனங்களும் கடலூருக்கு ஓடிவருவார்கள். அதனால் மக்களுக்கு வேலைவாய்ப்பு அதிகமாக உருவாக்க வாய்ப்புள்ளது. இதுபோன்ற எண்ணற்ற விஷயங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். வாய்ப்பு கொடுத்தால் இந்த கடலூர் தொகுதி மக்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவோம்" என்று தெரிவித்தார்.