கடலூர் மாவட்டத்தில் தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் ஒரு அணியாகவும், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சத்யா, பன்னீர்செல்வம் ஆகியோர் மற்றொரு அணியாகவும் இரண்டு வருடங்களாக செயல்பட்டு வருகின்றனர். தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்ததையடுத்து, இருதரப்பினருக்கும் இடையே முன்விரோதம் அதிகமாகியுள்ளது.
இதில், கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த சத்யா, பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான திருவதிகையைச் சேர்ந்த மணிகண்டன்(23), பாலாஜி (22) ஆகியோர்களுக்கும், அமைச்சர் எம்.சி. சம்பத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே இருந்த முன்விரோதத்திற்கு இடையே, தற்போது கரோனா நோய்க் கிருமி பரவலைத் தடுக்க யார் கிருமி நாசினி தெளிப்பது, நிவாரணம் வழங்குவது, விழிப்புணர்வு வழங்கவது என அவ்வப்போது பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இச்சூழலில் இரு தரப்பினருக்கும் நேற்று (ஏப்ரல் 14) மாலை மோதல் ஏற்பட்டது. இதையடுத்து மணிகண்டன், பாலாஜி ஆகியோர் அருகாமையில் உள்ள சொந்த விவசாய நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்றுள்ளனர். அங்கு மறைந்திருந்த அமைச்சரின் ஆதரவாளர்கள் 10 பேர், மணிகண்டன், பாலாஜி ஆகிய இருவரையும் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.
தண்ணீர் பாய்ச்ச சென்ற இருவரும் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால், அவரைத் தேடி உறவினர்கள் சென்றுள்ளனர். அப்போது இருவரும் வெட்டப்பட்டு, ரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் கிடந்துள்ளனர். பின்னர் இதுகுறித்து பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர், உடலைக் கைபற்றி விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது. கொலை செய்து விட்டு தப்பி ஓடிய அமைச்சரின் ஆதரவாளர்களை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.