கடலூர்: கடலூரின் பணிக்கன் குப்பம் கிராமத்தில், கடலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 19ஆம் தேதி முந்திரி தொழிற்சாலை தொழிலாளி கோவிந்தராசு அடையாளம் தெரியாத வகையில் உயிரிழந்தார்.
இதனையடுத்து கோவிந்தராசுவின் மகன், தனது தந்தை கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டி உறவினர்களுடன் போராட்டம் நடத்தினார்.
ஜாமின் வழக்கு தள்ளுபடி
பின்னர் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து விசாரணையை மேற்கொண்ட சிபிசிஐடி காவல்துறையினர், நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ், அக்டோபர் 11ஆம் தேதி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து அவரது தரப்பில் ஜாமீன்கோரி தொடரப்பட்ட வழக்கு நேற்று (அக்.23) மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, கொலை வழக்கு விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
விசாரணைக்கு ஒருநாள் அனுமதி
கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சிறையில் உள்ள நடராஜன், அல்லாபிச்சை, தங்கவேல், வினோத், சுந்தர்ராஜன் ஆகியோரை விசாரிக்க அனுமதிகோரி சிபிசிஐடி காவல்துறையினர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் ஒருநாள் மட்டும் விசாரணை நடத்த அனுமதியளித்து நீதிபதி பிரபாகரன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் சிபிசிஐடி டிஎஸ்பி கோமதி தலைமையிலானோர், ஐவரையும் முந்திரி தொழிற்சாலைக்கு அழைத்துச் சென்று இன்று (அக்.24) விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: அதிமுகவை உரிமை கோர சசிகலாவுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை - நீதிமன்றத்தில் வாதம்