கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 50க்கும் மேற்பட்ட நகர்ப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாகப் பெய்த கனமழையால் கடலூர் மஞ்சக்குப்பம், புதுப்பாளையம், விஎஸ்எல் நகர், ராகவேந்திரா நகர், வெங்கடாஜலபதி நகர்ப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து, பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளிவர முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்திற்குப் பேரிடர் கண்காணிப்பு சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள அன்சுல் மிஸ்ரா இன்று (நவ.30) மழைப் பாதிக்கப்பட்ட இடங்களை படகு மூலம் சென்று பார்வையிட்டு, மக்களுக்கு ஆறுதல் கூறி பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்சுல் மிஸ்ரா, 'கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழையால் கடலூர் நகர்ப் பகுதியில் பல இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலூர் நகரத்தில் இனி வருங்காலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தரமாக வடிகால் வசதி செய்து தரப்படும்.
அதற்காக ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றோம். மக்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சட்டவிரோதமாக பேனர் வைக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- உயர் நீதிமன்றம்