கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “மாவட்டத்தில் இதுவரை 395 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 7,272 பேருக்கு கரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், 395 பேருக்கு கரோனா தொற்றிருப்பது தெரியவந்துள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து அதிக பேருக்கு கரோனா தொற்று பரவிய செய்தியை அடுத்து கோயம்பேடு சென்று வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். அவர்களில் யாருக்கேனும் கரோனா அறிகுறி தென்பட்டால் உடனடியாக அப்பகுதியில் கிருமி நாசினி தெளித்து அவருடன் தொடர்பிலிருந்தவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்துவருகிறோம்.
கடலூர் மாவட்டம் முழுவதும் 121 பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 9 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 555 நபர்களுக்கும் சத்தான உணவு, வழங்கப்படுகிறது. தொற்று பரவமால் இருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். ஒவ்வொருவரும் சமூக அக்கறையுடன் பங்களிப்பு செய்யவேண்டும்.
பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வரக்கூடாது. அத்தியாவசியத் தேவைகளுக்காக வரும்போது முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். முதலமைச்சரின் அறிவிப்பு படி கடலூர் மாவட்டத்தில், கடைகள் திறக்கப்பட்டுள்ளன" என்றார்.
இதையும் படிங்க: அத்தியாவசியப் பொருள்கள் வழங்கிய விசிக