கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் பயனாளிகளுக்கு குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் மாலா தலைமையில் காவல் துறையினர் குடிசை மாற்று வாரிய உதவி பொறியாளர் ஜெயக்குமாரின் வீட்டில் சோதனை நடத்தினர்.
சோதனையின்போது ஜெயக்குமார் வீட்டில் அவரின் மனைவியிடம் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் சோதனை நடைபெற்றது சோதனையில் முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைப்பற்றினர்.
இதேபோல் கடலூர் மஞ்சக்குப்பத்தில் தனியார் கட்டுமான நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்த நிறுவனத்தின் மூலமாக சிதம்பரம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் கட்டப்பட்டுவருகின்றன.
இந்த வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு புகார் வந்ததையடுத்து காவல் துறை துணை ஆய்வாளர் மெல்வின் ராஜாசிங் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் கட்டுமான நிறுவன அலுவலகம் மற்றும் நிறுவனத்தின் உரிமையாளர் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.
இதையும் படிங்க: வெளிமாவட்டங்களில் இருந்து வரும் நெல் நேரடிகொள்முதல் எனப் புகார் - 570 நெல் மூட்டைகள் பறிமுதல்