கடலூரை அடுத்த பில்லாலி தொட்டியில் முடிதிருத்தும் நிலையம் நடத்தி வருபவர் திருமலை. இவர் கடந்த 19ஆம் தேதி தனது மாமா சண்முகத்திற்கு உடல்நிலை சரியில்லை என்று மதியம் 2.30 மணி அளவில் நெல்லிக்குப்பத்தில் உள்ள அருணாச்சலம் தனியார் மருத்துவமனைக்கு தனது இருசக்கர வாகனத்தில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார்.
அவர் மருத்துவமனை வெளியில் இருசக்கர வாகனத்தை பூட்டிவிட்டு உள்ளே சென்று சிகிச்சை முடித்துவிட்டு பின் வந்து பார்த்தபோது வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனைத்தொடர்ந்து இரண்டு நாட்களாக தேடியும் இருசக்கர வாகனம் கிடைக்காததால் திருமலை நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்தார்.
திருமலை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, நபர் ஒருவர் திருமலையின் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் தெளிவாக பதிவாகியிருந்தது. அதனை ஆதாரமாகக் கொண்டு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: சாமி சிலையின் கிரீடத்தை களவாடிய நபர்; சிசிடிவி காட்சி வெளியாகியது!