கடலூர்: நெய்வேலியில் நேற்று என்எல்சியால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆதரவாக கண்டன பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், சிபிஎம் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர், காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
பொதுக்கூட்டத்தில் பேசிய பாலகிருஷ்ணன், ”என்எல்சிக்காக தங்கள் கூட்டணியினர் பல்வேறு போராட்டம் நடத்துகிறோம். ஆனால், தற்பொழுது ஜனவரி 7ஆம் தேதி நெய்வேலி மக்களுக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் நடை பயணம் நடத்துவதாக அறிவித்திருந்தார். இது யாரை ஏமாற்றுவதற்காக செய்வது. வேறு பயணத்திற்கு எங்கேயாவது போக வேண்டிய ஆளு ஏன்யா நடைபயணம் போகிறாய்? வேறு எங்கேயாவது போக வேண்டியது தானே.
பாமக கட்சியைச் சேர்ந்த சண்முகம் நிலக்கரி துறை அமைச்சராக இருந்தார். தலித் ஏழுமலை அமைச்சராக இருந்தார். அப்பொழுதெல்லாம் என்எல்சி-க்காக எந்த கோரிக்கையும் தாங்கள் நிறைவேற்றவில்லை, அப்போதே வாஜ்பாய் மூலம் நிறைவேற்றி இருக்கலாமே.
தாங்கள் மோடியுடன் கூட்டணியில் இருக்கும்பொழுது யாரை ஏமாற்றுவதற்காக நீங்கள் நடைபயணம் மேற்கொள்கிறீர்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை. என்எல்சி நிறுவனம் என்றால் மோடி தானே? இத்தனை ஆண்டுகள் நாடகம் நடத்திப் பகுதி மக்களை ஏமாற்றி வந்ததுதான் மிச்சம். உண்மையிலேயே நடைபயணம் மேற்கொள்ள வேண்டுமென்றால் மோடி வீட்டுக்கு நடை பயணம் மேற்கொள்ளுங்கள்.
மேலும், அங்கு சென்று அவர்களிடம் நிரந்தர வேலை, உரிய இழப்பீடு அனைத்தையும் கேட்டுப்பாருங்கள். அதை விட்டுவிட்டு இங்கு மக்களை ஏமாற்ற நாடகம் நடத்துகிறீர்கள். தாங்கள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், இதுவரை தாங்கள் நாடாளுமன்றத்தில் என்றாவது ஒருநாள் என்எல்சி பற்றி பேசியதுண்டா?
பார்லிமென்டிற்கு தாங்கள் இதுவரைக்கும் போனதில்லை. கோர்ட்டுக்கு போகாத வழக்கறிஞரைப் போல நாடாளுமன்றத்திற்கு போகாத நாடாளுமன்ற உறுப்பினர்’ என கேலி செய்து பேசினார். மேலும் தங்கள் நடை பயண நாடகத்தை நெய்வேலி மக்கள் ஒரு போதும் நம்ப மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.