கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அரசு சார்பில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் கடலூர் மாவட்டத்தில் அதிகப்படியாக உள்ளதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் தண்டபாணி நகரைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வந்த 30 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை கடலூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளித்துவருகின்றனர்.
இதனிடையே அவருடைய குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண் பிள்ளைகள், கணவர், மாமனார், மாமியார் என ஐந்து பேருக்கும் கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் ஐந்து பேரையும் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அவர்கள் வசித்து வந்த தண்டபாணி நகர் பகுதியில் வெளியாட்கள் யாரும் செல்லாத வகையில், நகராட்சி சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, கிருமி நாசினி, பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், அவர்கள் குடும்பத்துடன் வேறு யாரேனும் தொடர்பில் இருந்தார்களா? என சுகாதாரத் துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:உரிமை கோரப்படாத சடலங்கள் விற்பனை! - அரசு தகவல்