உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸின் தாக்கம் தமிழ்நாட்டில் கோரத்தாண்டவமாடி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் போர்க்கால அடிப்படையில் ஜூலை 31ஆம் தேதிவரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது. மேலும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும் முகக்கவசம் அணிய வேண்டும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும், தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் நேற்றுவரை கரோனா தொற்றால் 1,560 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (ஜூலை15) மேலும் 59 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1619 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரையும் கடலூர், விருத்தாச்சலம், சிதம்பரம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கடலூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 51 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், மாவட்டத்தில் கரோனா வைரஸிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,220 பேராக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் இதுவரை சிகிச்சை பலனின்றி 14 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.