கடலூர்: பண்ருட்டி அருகே திமுக கொடி கம்பம் நடும்போது மின்சாரம் தாக்கி ஒப்பந்த பணியாளர் படுகாயம் அடைந்த நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம், நெய்வேலி திமுக சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் இல்ல திருமண விழாவானது வருகிற (செப்.10) ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும், இந்த திருமண விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
திருமண விழாவை முன்னிட்டு, தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சுவர் விளம்பரங்கள் மற்றும் திமுக கொடிகளை பல்வேறு இடங்களில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், இதற்கான பணிகளைச் செய்வதற்காக தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சீனத்து என்பவருடன் சுமார் 12 பேர்கள் குழுவாக இணைந்து ஒப்பந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: G20 Summit: தமிழர் பெறுமை பறைசாற்றும் தஞ்சாவூர் ஓவியக் கூடம்! பாரத் மண்டபத்தை அலங்கரிக்கிறது!
இந்நிலையில், பணியாளர்கள் கடலூர் சாலையில் திமுக கட்சிக் கொடிகளை நடும் பொழுது சாலையில் ஓரமாக இருந்த மின் மாற்றியில் திமுக கொடி கம்பம் உரசியதால் 28 வயதான அருண் குமார் என்பவர் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். அதனைத்தொடர்ந்து, மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்டவரை அவருடன் பணிபுரியும் சக ஊழியர்கள் உடனடியாக மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் இருந்து தற்போது மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். விபத்திற்கான தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பண்ருட்டி போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சனாதனம் குறித்து முதலமைச்சர் பொது மேடையில் என்னுடன் விவாதிக்க தயாரா? - கிருஷ்ணசாமி கேள்வி