கடலூர் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஆட்சியர் வி.அன்புச்செல்வன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியதாவது; முதலமைச்சர் கூறியதை போல், விழித்திரு, விலகியிரு, சமூக இடைவெளியை மேற்கொண்டு, தன்னைத்தானே தனிமைப்படுத்தி மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் மக்களின் அலட்சியத்தால் பெரும் அவதிக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர்.
எனவே, இனிவரும் 15 நாட்களில் மக்கள் அனைவரும் மிகவும் கவனமாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்களுக்காக கூட்டுறவுத்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை, மருத்துவத்துறை, நகராட்சி மற்றும் பேரூராட்சித்துறைகளை சார்ந்த அலுவலர்கள் முழு ஈடுபாட்டோடு சேவை செய்து வருகிறார்கள். பொதுமக்களாகிய நீங்களும் எங்களோடு ஒத்துழைத்து, கரோனா வைரஸ் பரவாமல் கடலூர் மாவட்டத்தை காத்திட வேண்டும்.
கடலூர் மாவட்டத்தில் 840 படுக்கை வசதிகள் கொண்ட சிகிச்சை பிரிவுகள் தயாராக உள்ளன. இங்குள்ள அனைத்து அம்மா உணவகங்களில் பொதுமக்கள் நலன் கருதி அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மளிகை பொருட்கள் வீடுகளுக்கே டோர் டெலிவரி செய்வதற்கு ஏதுவாக வணிகர் சங்கங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய செயல்பாடுகளை பயன்படுத்திக்கொண்டு வீடுகளில் இருந்து வெளிவரும் சூழலை தவிர்க்க வேண்டும். நமது மாவட்டத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த 3,613 நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் கிராமங்களில் வெளியில் செல்வதை பார்க்கும் பொதுமக்கள் அவர்களுக்கு தக்க அறிவுரை வழங்க வேண்டும்.
அவ்வாறு கேட்க மறுக்கும் பட்சத்தில் மருத்துவக்கட்டுப்பாட்டு அறை எண் 1077-க்கு தகவல் தெரிவிக்கலாம் என்றார்.
இதையும் படிங்க: 'பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மத்திய அரசு ரூ.5000 வழங்க வேண்டும்'