கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கோழிபாக்கத்தைச் சேர்ந்த முத்துக்குமார் பிருந்தா தம்பதியரின் மகன் பிரவீன்குமார் (13). கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரவீன் குமாரின் இரண்டு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
மகனுக்கு, தாய் பிருந்தா சிறுநீரக தானமளிக்க முன்வர, பிரவீன்குமார் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரவீன் குமாருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
இந்நிலையில் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பணம் பெற்றுக் கொள்ள அனைத்து ஆவணங்களையும், மருத்துவமனை நிர்வாகத்திடம் பிரவீன் குமாரின் பெற்றோர் அளித்துள்ளனர். அதனை பெற்றுக் கொண்ட மருத்துவமனை நிர்வாகம், இந்த காப்பீட்டு திட்டத்தின் மூலம் பணம் பெற முடியாது என்றும், 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கட்டினால் மட்டுமே அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று கூறியுள்ளது.
இதனால், பிரவீன்குமாரின் அறுவை சிகிச்சைக்காக பெற்றோர்கள் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வட்டிக்கு வாங்கி கட்டியுள்ளனர்.
சிகிச்சை முடிந்து மூன்று மாதம் கழித்து முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக, பிரவீன்குமாரின் தந்தை முத்துக்குமாருக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இது குறித்து அவர் அதிகாரிகளிடம், சென்று விசாரித்த போது, அறுவை சிகிச்சைக்காக அந்த தனியார் மருத்துவமனை 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் காப்பீட்டு தொகை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துக்குமார்-பிருந்தா தம்பதியினர், இது தொடர்பாக கடந்த ஓராண்டு காலமாக அதிகாரிகளிடம் புகார் மனு அளித்துள்ளனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், பாதிக்கப்பட்ட பெற்றோர், இன்று (அக்.5) இரண்டு இடத்திலும் பணம் பெற்ற மருத்துவமனை நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தங்களிடம் பெற்ற இரண்டு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் பணத்தை திரும்ப பெற்றுத் தருமாறு கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மேலும், அறுவை சிகிச்சை செய்து ஒரே மாதத்தில் மாற்று சிறுநீரகமும் பழுதாகி தற்போது ஆபத்தான நிலையில் தனது மகன் உள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க : முன்னறிவிப்பின்றி பணிநீக்கம் - விமான நிலைய ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்