கடலூர்: தெற்கு பிச்சாவரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி விமலா. இவர்களின் மகள் அஜினா தேவி (21)சிதம்பரம் அருகே தனது உறவினர் வீட்டில் இருந்து அரசு கலைக் கல்லூரியில் எம்எஸ்சி கணிதம் முதலாமாண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த மாணவி யாரிடமும் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டிலிருந்து அதிகாலை தோட்டத்திற்குச் சென்ற அஜினா தேவி, நீண்ட நேரம் ஆகி வராததால் தாய் தோட்டத்துக்குச் சென்று பார்த்துள்ளார்.
அப்போது, அவர் அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்ட தாய் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல் துறையினருக்கு மாணவி எழுதிவைத்த கடிதம் ஒன்று சிக்கியது. அதில், தான் குளிப்பதை ஒருவர் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு தன்னை மிரட்டியதாகவும், அதிலிருந்து தப்பிக்க தனக்கு வேறு வழியில்லை எனவும் எழுதி வைத்துள்ளார்.
இதையடுத்து அந்த கடிதத்தை கைப்பற்றிய காவல் துறையினர், அஜினா தேவியின் செல்ஃபோனை கைப்பற்றி ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டியது யார் என்று கடிதத்தில் குறிப்பிடாததால், அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பல பெண்களை ஏமாற்றிய சென்னை மாடலுக்கு ஜாமீன் மறுப்பு