கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் வெ. அன்புச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் அளித்தனர். இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மொத்தம் 357 மனுக்கள் பெற்றப்பட்டன.
பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் தீர ஆராய்ந்து அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
குறிஞ்சிப்பாடி வட்டம், வடக்குத்து கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகன் சௌந்தரவேல் என்பவர் ஈழுத்தன் ஏரியில் விழுந்து சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இந்நிலையில் இறந்தவரின் தந்தையான சக்திவேல் என்பவருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
அதற்கான காசோலையை சக்திவேலிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். மேலும் சிதம்பரத்தைச் சேர்ந்த சில மாற்றுத்திறானாளிகள் அளித்த மனுவின் மீது சில நிமிடங்களிலே நடவடிக்கையெடுத்து அவர்கள் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினை வழங்கினர்.
இந்த குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். ராஜ கிருபாகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் வி. வெற்றிவேல், தனித் துணை ஆட்சியர் எஸ். பரிமளம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராஜஸ்ரீ, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் என அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.