சிதம்பரம் வஉசி தெருவைச் சேர்ந்த லதா என்ற பெண், கடந்த சனிக்கிழமையன்று (16/11/2019) சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சாமி கும்பிட சென்றார். அப்போது தர்ஷன் என்ற தீட்சிதர் லதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை கன்னத்தில் அறைந்து தாக்கினார். இச்சம்பவம் குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் பெண் செவிலியரை தாக்கிய தர்ஷன் தீட்சிதரை உடனடியாக காவல் துறை கைது செய்யக்கோரியும், இதுவரை கைது நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்தும் தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை அனைத்து பெண் அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிதம்பரம் காந்தி சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில பிரச்சார செயலாளர் மணிமேகலை தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட செவிலியர் பங்கேற்றனர்.
இதுகுறித்து அச்சங்கத்தின் மாநில பிரச்சார செயலாளர் மணிமேகலை கூறுகையில், "சம்பவம் நடந்து பல நாட்களாகியும் பெண் செவிலியரை தாக்கிய தர்ஷன் தீட்சிதரை இதுவரை காவல்துறை கைது செய்யவில்லை. அவர் பாதுகாப்பாக இருக்கிறார். காவல்துறை அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அனைத்து அமைப்புகளையும் ஒன்று திரட்டி மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்துவோம். தாக்குதலுக்கு உள்ளான பெண் சுகாதார செவிலியர் லதா உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டு தற்போது கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்" என கூறினார்.
இதையும் படிங்க: பெண் பக்தரை தாக்கிய தீட்சிதர் - கைது செய்யக்கோரி சார் ஆட்சியரிடம் மனு