கடலூர்: தமிழ்நாட்டில் ஒமைக்ரான் கரோனா பரவல் எண்ணிக்கை நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றது. இதனையடுத்து அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது. ஏற்கனவே அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கல்லூரி மாணவர்களுக்கும் தற்போது ஜனவரி 31ஆம் தேதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறையின்கீழ் பயிலும் மாணவ மாணவியருக்கு தனித்தனியே விடுதிகள் உள்ளன.
இதில் பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் தங்கிப் படித்துவருகின்றனர். இந்நிலையில் கல்லூரிகளுக்கு வருகிற 31ஆம் தேதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான மாணவர்கள் விடுதிகளை காலி செய்துவிட்டு சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டனர்.
இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த துறை மாணவிகள் சிலர் விடுதிகளில் தங்கியுள்ளனர். சிதம்பரம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தாமரை இல்லம் விடுதி, மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கிப் படித்த மாணவிகள் சிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது.
கடந்த சில நாள்களில் அடுத்தடுத்து மருத்துவத் துறை படிப்பு சார்ந்த மாணவிகள் சுமார் 40 பேருக்கும் மேல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மாணவிகள் தங்கியிருந்த தாமரை இல்லம் மூடப்பட்டது. இங்குத் தங்கியிருந்த மாணவிகள் வேறு ஒரு விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதையடுத்து தாமரை இல்லம் விடுதியின் வாயில் மூடப்பட்டது.
இதையும் படிங்க: 'சாம்பாரில் பல்லி, ஊத்திட்டாங்க அள்ளி'- வாடிக்கையாளர் அதிர்ச்சி!