கடலூர் நகரின் மையப்பகுதியான அண்ணா மேம்பாலத்தில் இருந்து கம்பியம்பேட்டை செல்லும் இணைப்பு சாலை முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சாலையாக கருதப்படுகிறது. 2 கிலோ மீட்டர் தொலைவு உள்ள இந்த சாலையில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் இல்லாததால், இந்தப் பிரதான சாலை இருண்டு காணப்படுகிறது.
இதனால், இந்த இரண்டு கிலோமீட்டர் சாலையில் சமூக விரோதச்செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் மாலை 6 மணிக்குப்பிறகு, சில திருநங்கைகளின் அட்டகாசமும் இந்த சாலையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சாலையில் செல்பவர்களிடம் வம்பு இழுப்பது, அவர்களைத் தகாத வார்த்தைகளால் பேசுவது, பாலியல் தொழிலுக்கு அழைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது.
மேலும், பணம், செல்ஃபோன், நகை உள்ளிட்டப்பொருள்களை பிடுங்குவது உள்ளிட்ட செயல்களில் தொடர்ந்து சில திருநங்கைகள் ஈடுபட்டு வருவதால் இந்த சாலையில் மாலை நேரங்களில் செல்வதற்கு பொதுமக்கள் அச்சப்படும் நிலை ஏற்படுவதாகவும், காவல் துறையும் இதனைக்கண்டு கொள்வதில்லை எனவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் கடலூர் கம்மியம்பேட்டை இணைப்புச்சாலையில் நடந்து சென்ற ஒரு இளைஞரைப் பிடித்து, அவரை அடித்து, அவர் பாக்கெட்டில் இருந்த செல்போனை பிடுங்கி, அவர் சட்டையைக் கிழித்து அவரை ஓட ஓட சில திருநங்கைகள் விரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. பல குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வந்தாலும் ஆதாரம் இல்லாத நிலையில், தற்போது சிசிடிவி ஆதாரம் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இனியாவது, காவல் துறை உரிய நடவடிக்கை எடுத்து இந்தச்சாலையில் நடைபெறும் சமூக விரோத செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே கடலூர் மக்களின் கோரிக்கையாகவுள்ளது.
இதையும் படிங்க: மருத்துவமனை வளாகத்தில் ரியல் எஸ்டேட் தரகரை வெட்டியவர் கைது - சிசிடிவி காட்சி