கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த வி.ஆண்டிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணதாசன் (34). மளிகைக் கடை ஊழியரான இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா (29) என்பவர் கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர்கள் இருவருக்கும் திருமணம் தாண்டிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 12ஆம் தேதி மளிகைக் கடை ஊழியர் கண்ணதாசன் காணாமல் போனார். கண்ணதாசனை காணவில்லை என அவருடைய உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்த காவல்துறையினர் கண்ணதாசன் லிங்கா ரெட்டி பாளையத்தில் உள்ள கோயில் வளாகத்தில் புதைக்கப்பட்டு இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
காவல்துறையினர் கண்ணதாசனின் செல்போன் என்னைக் கொண்டு ஆய்வு செய்ததில் கடைசியாக அப்பகுதியைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் கோபிநாத் என்பவர் தொடர்பு கொண்டது தெரியவந்தது. விசாரணையில் மளிகைக் கடை ஊழியர் கண்ணதாசனை ஜோதிடர் கோபிநாத் கொலை செய்து லிங்கா ரெட்டி பாளையத்தில் உள்ள கோயில் வளாகத்தில் புதைத்துக் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கண்ணதாசனைக் கொன்று புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் கண்டு, அவர் உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனையடுத்து ஜோதிடர் கோபிநாத், அவருடைய நண்பர் திருப்பதி, கண்ணதாசனிடம் திருமணம் தாண்டிய உறவிலிருந்த மஞ்சுளா ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். கோயில் வளாகத்தில் மளிகைக் கடை ஊழியர் ஒருவரைக் கொன்று புதைத்தது கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தி.மலையில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம், செல்போன் பறிப்பு: நால்வர் கைது