கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால், மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், மது கிடைக்காததால் மது பிரியர்கள் பல்வேறு விபரீத முடிவுகளில் ஈடுபட்டுவருகின்றனர். அண்மையில், புதுகை மாவட்டத்தில் முகத்திற்குச் சேவிங் செய்யும் லோஷனை குளிர்பானத்தில் கலந்து சாப்பிட்டு மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து, தமிழ்நாட்டின் பல்வேறுப் பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபானம் விற்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஆனால், கடலூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒருபடி மேலே போய் சொந்தமாக சாராயம் காய்ச்சுவதைத் தற்போது குடிசைத் தொழிலாக மாற்றிவிட்டனர்.
இதனிடையே, கிராமப் பகுதிகளில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதாகக் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கடலூர் சின்னவாணியர் தெருவில் சாராயம் காய்ச்ச முக்கியப் மூலப்பொருளாக உள்ள ஈஸ்ட் எனப்படும் பவுடரை விற்பனை செய்து வந்தவரைக் காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். கிருஷ்ணராஜ் என்பவரிடம் இருந்து 1000 கிலோ எடை கொண்ட ஈஸ்ட் பவுடரை பறிமுதல் செய்துள்ளனர்.
இதனையடுத்து, கடை உரிமையாளர் கிருஷ்ணராஜை கைது செய்ததுடன் கடைக்குச் சீல்வைத்தனர். இவர் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கும் ஈஸ்ட் பவுடர் விற்பனை செய்துள்ளதைத் தொடர்ந்து இவர் எங்கு எல்லாம் விற்பனை செய்துள்ளாரோ அந்தப் பகுதியில் காவல்துறையினர், தற்போது தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஈஸ்ட் பவுடர் நுரைக்கும் தன்மை உடையதாகவும், கேக் உள்ளிட்ட பொருட்கள் தயாரிப்பதற்கும் பேக்கரி நிறுவனங்களில் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பொறியியல் படிப்பு ஆன்லைன் கலந்தாய்வுக்காக சாப்ட்வேர் உருவாக்க உத்தரவு!