கடலூர் புதுப்பாளையத்தைச் சேர்ந்த 22 வயது கர்ப்பிணி பெண் தனது கணவருடன் கடந்த 8ஆம் தேதி இரவு சினிமா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது, நான்கு பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணின் கணவரை தாக்கிவிட்டு அப்பெண்ணை காரில் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்தனர்.
இதுகுறித்து கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு திருப்பாதிரிப்புலியூர் மார்க்கெட் காலணியைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனுவும் அளிக்கப்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்தைக் கண்டுக்கும் விதமாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் சாந்தகுமாரி தலைமை வகித்தார். மேலும், ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
அதில், கடலூர் புதுப்பாளையத்தில் கர்ப்பிணி பெண்ணைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த அந்த நான்கு பேருக்கு முன்பிணை வழங்கக்கூடாது என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்கக்கோரியும் மேலும் கடலூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தி பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இதையும் படியுங்க: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: திமுக பிரமுகர் போக்சோ சட்டத்தில் கைது