கடலூர் அருகே உள்ள எம்.புதூர் கிராமத்தில் மோகன்ராஜ் என்பவர் நாட்டு வெடி பட்டாசு தயாரிக்கும் கொட்டகை வைத்துள்ளார். கோயில் திருவிழாக்கள் மற்றும் சுப துக்க நிகழ்ச்சிகளில் வெடிக்கப் பயன்படுத்தும் நாட்டு வெடி பட்டாசுகளை தயாரிக்கும் பணியில் மூன்று பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் என ஐந்து பேர் நேற்று பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு தயாரித்து வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடி பட்டாசுகள் வெடித்துச் சிதறி விபத்து ஏற்பட்டது. இதில் பணியில் இருந்த ஐந்து பேரும் சிக்கியுள்ளனர். இந்த வெடிவிபத்தில் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த அம்பிகா (50) மற்றும் பெரிய காரைக்காடு கிராமத்தைச் சேர்ந்த சித்ரா(35) சி.என்.பாளையத்தை சேர்ந்த சத்யராஜ் (34) சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் வசந்தா என்ற பெண் இன்று அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். வைத்திலிங்கம் என்ற ஆண் மட்டும் லேசான காயங்களுடன் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து கடலூர் அரசு தலைமை மருத்துவமனை சவக்கிடங்கில் உள்ள வசந்தாவின் உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்திய தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், தொடர்ந்து இவ்விபத்தில் உயிரிழந்த மற்றவர்களின் கிராமங்களுக்கே சென்று நேரில் அஞ்சலி செலுத்தி, தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூபாய் 15 ஆயிரம் நிவாரண உதவி வழங்கி அவர்களின் உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினார்.
3 லட்சம் ரூபாய் நிவாரண நிதி: பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கணேசன், ”கடலூர் மாவட்டத்தில் அருகில் எம்.புதூர் கிராமத்தில் எதிர்பாராவிதமாக பட்டாசு செய்கின்ற இடத்தில் திடீர் விபத்து ஏற்பட்டு அதன் மூலமாக 4 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதை அறிந்த முதலமைச்சர் அவர்கள் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் உடனடியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 3 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கி இருக்கிறார்கள். காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் வழங்குமாறும் உத்தரவிட்டிருக்கிறார். மாண்புமிகு முதலமைச்சரின் உத்தரவின் பேரில் உயிரிழந்த குடும்பத்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளேன்’’ எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “பட்டாசு உற்பத்தி செய்கின்ற உற்பத்தியாளர்கள் அரசினுடைய முழு அனுமதி பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக இது போன்று பாதுகாப்பு இல்லாமல் இருக்கின்ற பட்டாசு உற்பத்தி செய்கின்ற அந்த உற்பத்தியாளர்கள் மீதும் நிறுவனங்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பட்டாசு உற்பத்தி செய்யும் அனைத்து இடங்களிலும் உள்ள தொழிற்சாலைகளுக்குச் சென்று முறையாக ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கவும், முழுமையாக பாதுகாப்பு இல்லாத இடங்களில் உரிமங்களை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கவும்’’ முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குஜராத் கலவர வழக்கு: பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி