கடலூர்: தமிழ்நாட்டில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் தமிழ்நாடு தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு, தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதில், தேர்தல் குறித்த முன்னேற்பாடுகள், சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதா சாகு, "தமிழ்நாட்டில் ஏழாயிரம் வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு பணிகள் ஏற்பாடு செய்யப்படும்.
இவை தயார் நிலையில் உள்ளன. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் தேர்தலின் போது எந்தவித சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படுவதில்லை. தேர்தல் குறித்த செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளது.
தேர்தல் நேரத்தில் வாக்குச்சாவடிகள் கூடுதலாக ஏற்பாடு செய்யப்படவுள்ளன. வாக்காளர் பட்டியல் குறித்த விவரங்களை பொதுமக்கள் சரிபார்க்க, சேர்க்க, நீக்க போன்ற பணிகளுக்கு நான்கு முறை மாவட்டத்தில் முகாம்கள் நடத்தப்பட்டது. இன்னும் அதற்கான கால அவகாசம் உள்ளது. இதுவரை தமிழகத்தில் 21 லட்சத்திற்கும் மேற்பட்ட இளம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்” என்றார்.
தேர்தல் குறித்து நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமுரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.