ஒடிசா மாநிலம் உடிட் நகரை சேர்ந்தவர்கள் ஆகாஷ்தாஸ் (22), ஜிஜேந்திர கிரி (26), சுக்ரதேவ் (50), அனில்குமார் ஹாஜா (33), ஷாட்டி (23). இவர்கள் மதுரையில் தங்கி கட்டட வேலை செய்துவந்தனர். பின்னர் விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு சென்று மீண்டும் மதுரைக்கு வேலைக்கு வருவதற்காக சென்னை தாம்பரத்துக்கு வந்தனர். இதனையடுத்து அவர்கள் 5 பேரும் சென்னை தாம்பரம்-நெல்லை சுவேதா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி மதுரைக்கு புறப்பட்டனர்.
இவர்கள் விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு வந்தபோது, ஆகாஷ்தாஸுக்கும், அவருடன் வந்த 4 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே அந்த ரயில் இரவு 9 மணிக்கு விருத்தாசலம் அருகே சாத்துக்கூடல் மேல்பாதி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஜிஜேந்திர கிரி உள்பட 4 பேரும் சேர்ந்து ஆகாஷ்தாஸை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக பயணிகள் கூச்சலிட்டபடி, அந்த பெட்டியின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். பின்னர் ரயிலில் இருந்த காவல் துறையினர் விரைந்து வந்து பார்த்தபோது, ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட ஆகாஷ்தாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து ஜிஜேந்திர கிரி உள்பட 4 பேரும் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றபோது, அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
இது குறித்த தகவலின் பேரில் விருத்தாசலம் ரயில்வே ஆய்வாளர்(பொறுப்பு) அம்பேத்கர், துணை ஆய்வாளர்கள் சின்னப்பன், பால்வண்ணநாதன், காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆகாஸ்தாஸின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதனைத் தொடர்ந்து பிடிபட்ட நான்கு பேரையும் விருத்தாசலம் ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கூலி தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் ஆகாஷ்தாஸை மற்ற 4 பேரும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்தது தெரியவந்தது. ஓடும் ரயிலில் இளைஞரை தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் பயணியிடம் ரூ. 20 ஆயிரம் கொள்ளையடித்த 3 பேர் கைது!