கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியில் நெடுஞ்சாலைத் துறை விரிவாக்கப் பணியினால், சாலையோரம் மின் கம்பங்கள் அமைக்கும், அகற்றும் பணி நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் விருத்தாச்சலம் பெரியார் நகர் பேருந்து நிலையம் அருகே, ஒப்பந்த அடிப்படையில் நெடுஞ்சாலைத் துறை விரிவாக்கப் பணிக்காக பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த கங்காதுரை, அஜித் ஆகிய இரண்டு இளைஞர்கள் மின் கம்பத்தில் ஏறி, பணி செய்துகொண்டிருந்தனர்.
அப்போது, மின் கம்பத்தில் செல்லும் உயர் மின்னழுத்த மின் கம்பியில் உரசியதால், இரு இளைஞர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்து, மார்பு, கை கால்களில் தீக்காயம் ஏற்பட்டது. திடீரென மின்சாரம் பாய்ந்ததால், பயத்தில் மின் கம்பத்தில் இருந்து இளைஞர் ஒருவர் கீழே குதித்துள்ளார். மற்றொரு இளைஞர் உயிர் பயத்துடன், மின்கம்பத்தை கட்டி பிடித்தவாறு அலறிக் துடித்துக் கொண்டிருந்தார்.
இதனைப் பார்த்த வாகன ஓட்டிகள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர், மின்சாரம் செல்லும் உயர்மின் பாதையை நிறுத்திவிட்டு, சுமார் அரை மணி நேர போராட்டத்திற்குப் பின்பு அந்த இளைஞரை பத்திரமாக மீட்டனர்.
பின்னர் உடலில் தீக்காயங்களுடன் இருந்த இரண்டு இளைஞர்களையும் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து தகவலறிந்த மின்சார வாரிய அலுவலர்கள் உரிய அனுமதி பெறாமல், உயர் மின் அழுத்தம் செல்லும் மின்கம்பத்தில் எவ்வாறு பணியில் ஈடுபட்டீர்கள் என்று கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
இச்சம்பவத்திற்கு அலுவலர்களின் அலட்சியதான் காரணம் என்றும், ஒப்பந்த தொழிலாளர்கள் இருவரும் மீது மின்சாரம் பாய்ந்ததில், அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பியதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்நிலையில் சம்பவத்தின்போது விருத்தாசலம் பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்பட்டு, இருந்தது குறிப்பிடத்தக்கது.