கடலூர்: கடந்த 2004ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 26ஆம் தேதி தமிழ்நாட்டில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர மாவட்டங்களில் சுனாமி எனும் ஆழிப்பேரலை எழுந்து, கடற்கரையோரப் பகுதிகளை சூறையாடியது. இதில் கடலூர் மாவட்டத்தில் 610 பேர் உயிரிழந்தனர். சுனாமி தாக்கி இறந்தவர்களின் நினைவாக ஆண்டுதோறும் டிசம்பர் 26ஆம் தேதி சுனாமி நினைவு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று சுனாமி தாக்கிய 18ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, ஆழிப்பேரலையில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, கடலூர் துறைமுகத்தில் தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் துறைமுகத்தில் இருந்து சோனாங்குப்பம், சிங்காரத்தோப்பு மீனவ கிராமத்தைச் சேர்நத 100-க்கும் மேற்பபட்ட பெண்கள், கையில் பால் குடம் ஏந்தியபடி பேரணியாக சென்றனர்.
கடற்கரைக்குச் சென்ற மீனவர்கள், கடலில் பால் ஊற்றி மலர்த் தூவி வழிபட்டனர். மேலும் சுனாமியால் இறந்த தங்கள் உறவுகளை நினைத்து கண்ணீர் விட்டு அழுதனர். பின்னர் கடற்கரையோரம் கற்பூரம், விளக்கு ஏற்றி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி, இனி சுனாமி என்னும் ஆழிபேரலை வரக்கூடாது என கடல் மாதாவை வேண்டி வணங்கினர்.
இதேபோன்று கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில், கடலூர் நகர திமுக சார்பில் மாநகர தலைவர் ராஜா தலைமையில் ஏராளமானோர் கலந்துகொண்டு மலர் வளையும் வைத்து கடலில் மலர்த் தூவி அஞ்சலி செலுத்தினர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர்.
மேலும் கடலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்டத் தலைவர் திலகர் தலைமையில் மாவட்ட துணைத் தலைவர் ஓவிய ரமேஷ், மாவட்டச் செயலாளர் கோபால் முன்னிலையில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையிலும் அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: சுனாமி நினைவு தினம்: குமரி கடற்கரையில் கண்ணீர் மல்க மீனவர்கள் அஞ்சலி!