கடலூர்:கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி இந்தோனேசியாவில் உள்ள சுமத்திரா தீவில் கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டது.
இதனால் சுனாமி எனும் ஆழிப்பேரலை எழுந்து கடற்கரையோர பகுதிகளை சூறையாடியது. இந்தோனேசியா, இலங்கை, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கடற்கரையோரம் வசித்து வந்த 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியானார்கள்.
தமிழகத்திலும் சுனாமியின் கோரப்பசிக்கு பலர் இறந்தனர். கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம், தாழங்குடா, சோனாங்குப்பம், சொத்திக்குப்பம், அக்கரைக்கோரி, எம்.ஜி.ஆர். திட்டு, பில்லுமேடு உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களை சுனாமி புரட்டி போட்டது.
மீனவர்களின் ஏழாயிரம் கட்டுமரங்கள், பைபர் மற்றும் விசைப்படகுகள், நான்காயிரம் மீன் பிடிபடகுகள், 650 ஹெக்டேர் விவசாய நிலங்கள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன.
தேவனாம்பட்டினத்தில் நடைபயிற்சிக்கு வந்தவர்களை கடல் அலை இழுத்து சென்றது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் மண்ணோடு மண்ணாக புதைந்தனர்.
இதேபோல் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் சுனாமியின் கோரத்தாண்டவத்தில் 610 பேர் பலியாகினர்.
சுனாமி பேரலை தாக்கி 17 ஆண்டுகள் கடந்த நிலையில் தமிழக கடலோரங்களில் அதன் சோக நினைவுகள் இன்றும் அகலவில்லை.
கடலூரில் அஞ்சலி
சுனாமியால் பலியானவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடலூர் தேவனாம்பட்டினத்தில் இன்று நடைபெற்றது இதில் திமுக ,அதிமுக பாரதிய ஜனதா, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் நாம் தமிழர், திராவிட கழகம் என பல்வேறு அரசியல் கட்சிகள் மீனவ சமுதாயத்தை சேர்ந்த இயக்கங்கள் பொது நல இயக்கங்கள் தன்னார்வலர்கள் சுனாமி நினைவு தூண் முன் மலர் வளையம் வைத்து மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் சுனாமியில் பலியான தங்கள் உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடலில் பாலை ஊற்றியும் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
கடலூர் சிங்காரத்தோப்பு பகுதியில் தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் பால் மற்றும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர் மேலும் சிங்காரத்தோப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவு தூண் முன் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.
இதையும் படிங்க:Karnataka Night curfew:அதிகரிக்கும் ஒமைக்ரான் - கர்நாடகாவில் இரவு ஊரடங்கு அமல்