தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று (மே-27) நடைபெறுமென்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் விடைத்தாள்கள் திருத்துவதற்கான மையங்களில் முன்னேற்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு விடைத்தாள்கள் திருத்தும் ஆசிரியர்களுக்கான அடிப்படை வசதிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டையில் உள்ள சாராள்தக்கர் மேல்நிலைப் பள்ளி, ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி, இக்னேஷியஸ் கான்வென்ட் உள்ளிட்ட 7 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் 920 ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு லட்சத்து 50 ஆயிரம் விடைத்தாள்கள் தற்போது திருத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் தேர்வு மையத்திற்கு வருவதற்கு வசதியாக 14 வழித்தடங்களில் இருந்து 20 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆசிரியர்கள் தேர்வு மையத்திற்கு வந்தவுடன் அனைவரும் சானிட்டைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்து அவர்களுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டு முகக் கவசம் அணிந்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
விடைத்தாள் திருத்தும் அறைகளில் தகுந்த இடைவெளியுடன் அமர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்வு மையங்கள் அனைத்திற்கும் கிருமி நாசிகள் தெளிக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 8.30 மணிக்கு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது.
சாராள்தக்கர் மேல்நிலைப்பள்ளியில் விடைத்தாள் திருத்தும் பணியை முதன்மைக் கல்வி அலுவலர் பூபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கும் காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி கடலூர், விருத்தாசலம், சிதம்பரம் என மூன்று கல்வி மாவட்டங்களில் 443 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு ஆயிரத்து 800 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்துவதற்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
பணிக்கு வரும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பேருந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் ஆசிரியர்களுக்கு கிருமி நாசினிகள் கொடுக்கப்பட்டு, உடல் பரிசோதனை செய்யப்பட்டது. தகுந்த இடைவெளியை கடைபிடித்து விடைத்தாள் திருத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சமூக பரவலாக மாறியுள்ளதா கரோனா?