கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆதியூரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது நண்பர் சேத்துமடையைச் சேர்ந்த உதயகுமார். புருஷோத்தமன் சில மாதங்களுக்கு முன்பு விலையுர்ந்த இருச்சகர வாகனம் வாங்கிய நிலையில், மார்ச் 6ஆம் தேதி இரவு தன்னை காண்டூர் கால்வாய் அருகே சந்திக்கும்படி உதயகுமார் அவரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து புருஷோத்தமனும் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு உதயகுமாரை சந்திக்கச் சென்றுள்ளார். அங்கு உதயகுமார் தான் கடன் சுமையில் இருப்பதாகவும், அதுவரை இரு சக்கர வாகனத்தை கடன் வாங்கிய நபரிடம் கொடுக்குமாறும் புருஷோத்தமனிடம் தெரிவித்துள்ளார். இதற்கு புருஷோத்தமன் மறுப்பு தெரிவித்ததை அடுத்து நண்பர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே உதயகுமார், புருஷோத்தமனை காண்டூர் கால்வாயில் தள்ளிவிட்டு இரு சக்கர வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில், வெளியே சென்ற புருஷோத்தமன் வீடு திரும்பதால் அவரது பெற்றோர் வடக்கிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் புருஷோத்தமனைத் தேடி வந்தனர். அப்போது சேத்துமடையில் உதயகுமாரிடமிருந்து புருஷோத்தமனின் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், புருஷோத்தமனிடம் பணம், இருசக்கர வாகனம் கேட்டற்கு அவர் தர மறுத்ததால், காண்டூர் கால்வாயில் அவரைத் தள்ளிவிட்டதாக உதயகுமார் கூறினார்.
இதனைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு, காவல் துறையினர் காண்டூர் கால்வாயில் புருஷோத்தமனின் உடலைத் தேடி வருகின்றனர். ஆனால் இதுவரை உடல் கிடைக்கவில்லை. இதையடுத்து உதயகுமார் மீது இருசக்கர வாகனம் திருட்டு, கொலை வழக்குகள் பதிவு செய்து அவிநாசி சிறையில் அடைத்தனர்.