கோயம்புத்தூர் மாவட்டம், சரவணம்பட்டியை அடுத்த குரும்பபாளையம் பகுதியில் தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் திருநெல்வேலி மாவட்டம், அவரைக்குளம் பகுதியைச் சேர்ந்த திரவியம் (27) என்னும் இளைஞர், தலைமைச் செவிலியராக கடந்த ஒரு வருடங்களாகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் மருத்துவமனையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கரோனா வார்டு உருவாக்கப்பட்டது. இந்த வார்டில் கடந்த எட்டு மாதங்களாக திரவியம் பணியமர்த்தப்பட்டார். இதே வார்டில் ஐந்து மாதங்களாக பணியாற்றி வரும் ஒரு செவிலியரும், இவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் திரவியம் அந்த செவிலியரிடம் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாகத் தெரிகிறது. இதற்கு அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் (ஜன.24) இவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து மீண்டும் திரவியம் செவிலியரை சந்தித்து பேச முற்பட்டபோது அவர் பேச மறுத்துள்ளார்.
இதனால் விரக்தியடைந்த திரவியம் தற்கொலையால் உயிரை மாய்த்துக் கொண்டார். இது குறித்து அவருடன் பணியாற்றும் நண்பர்களுக்கு அலைபேசி மூலம் கூறியுள்ளார். தகவலறிந்த அவர்கள் அவர் தங்கியிருக்கும் வீட்டுக்குச் சென்று, அவரை மீட்டு அந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கோவில்பாளையம் காவல்துறையினருக்கும், திரவியத்தின் பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. கோவில்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:ரூ.1.32 லட்சம் கையூட்டு பெற்ற ஜெயில் சூப்பிரண்ட் கைது!