கோயம்புத்தூர்: திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர், மனோஜ். இவர் கடந்த மே 5-ஆம் தேதி வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர், அவருக்கு ஊசி மூலம் மருந்து செலுத்த அறிவுறுத்திச் சென்றதாகவும், அதையடுத்து அங்கு பணியில் இருந்த செவிலியர் மனோஜ்-க்கு கையில் நரம்பு வழியாக ஊசி மருந்தை செலுத்தியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, மனோஜ் தாங்க முடியாத கை வலியாலும், எரிச்சலாலும் அவதிப்பட்டுள்ளார்.
மேலும் இது குறித்து செவிலியரிடமும் கூறியுள்ளார். அதற்கு செவிலியர், அவரை பரிசோதித்த மருத்துவர் இரண்டு ஊசி செலுத்த பரிந்துரை செய்ததாகவும், மீண்டும் ஒரு ஊசி மருந்து செலுத்தினால் சரியாகிவிடும் என்று தெரிவித்து, மனோஜிற்கு மேலும் ஒரு ஊசியை நரம்பு வழியாக செலுத்தி உள்ளார். அதன் பிறகு சிறிது நேரத்தில் கைவிரல்கள் கருப்பாக மாறி வலி தாங்க முடியாமல் தலை சுற்றி விழுந்து விட்டதாக மனோஜ் தெரிவித்தார்.
அதன் பிறகு எல்லாம் சரியாகிவிடும் என்று கூறி, பழனி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மனோஜை வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். ஆனால் தொடர்ந்து விரல்கள் வீங்கி, எரிச்சல் அதிகரித்ததால் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு மனோஜ் சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மருந்துகள் கொடுத்து வலியைப் போக்கியுள்ளனர்.
இந்த நிலையில், மனோஜின் விரல்கள் அழுகும் நிலை ஏற்பட்டதால் கோவை அரசு மருத்துவமனைக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவையில் மனோஜை பரிசோதனை செய்த மருத்துவர்கள், கையில் ரத்தம் செல்லும் நரம்புகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் ரத்த ஒட்டம் இல்லாமல் கைவிரல்கள் செயலிழந்து உள்ளதாகவும், மேலும் உடனடியாக விரல்களின் நுனிப் பகுதியை அறுவை சிகிச்சை மூலம் அப்புறப்படுத்தவில்லை என்றால், கழுத்து வரையிலும் செயல்பாடுகள் நின்றுவிடும் என்றும் கூறியுள்ளனர்.
இதனையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் மனோஜின் மூன்று விரல்களும் அறுவை சிகிச்சை மூலம் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளதாக மனோஜ் தெரிவித்தார். மேலும், பழனி அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியத்தால் தனது மூன்று விரல்களும் தற்பொழுது அகற்றப்பட்டுள்ளதாகவும், அலட்சியம் காட்டிய மருத்துவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட மகனுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் மனோஜின் தாயார் குக்கையாத்தாள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.