கோவை அருகே பாலமலை செல்லும் சாலையில் அமைந்துள்ள பெரியநாயக்கன்பாளையம் கிராமத்தில், இன்று (மே 12) காலை ஆடு மேய்ப்பதற்காக சீனிவாசன் என்பவர் சென்றுள்ளார். அப்போது பாலமலை சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்தின் கீழ் துர்நாற்றம் வந்ததை அடுத்து அங்கு சென்று பார்த்தபோது பாதி எரிந்த நிலையில் இளைஞர் ஒருவரின் பிணம் கிடந்துள்ளது.
இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினருக்கு அவர் தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில் தலை துண்டிக்கப்பட்டு இளைஞரின் உடலை தீ வைத்து எரித்தது தெரியவந்தது. மேலும் உயிரிழந்த இளைஞருக்கு 35 வயது இருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது. மேலும் கொலை செய்யப்பட்டவர் யார், எந்த பகுதியைச் சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.
இதனையடுத்து உடலைக் கைப்பற்றி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். பின்னர், சம்பவ இடத்தில் பெரியநாயக்கன்பாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் மணி தலைமையிலான காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.