கரோனா பெருந்தொற்றால் அல்லல்படும் மக்களைத் தேற்றும் விதமாக, அரசும், தன்னார்வலர்களும் உதவிவருகின்றனர். இந்நிலையில், தனது கிராம மக்கள் பெருந்தொற்றால் பாதிக்கப்படக்கூடாது என நினைத்த இளம்பெண் கவிப்பிரியா, அவர்களுக்கு உதவ தாமாக முன்வந்தார். இதையடுத்து, தன் தோழிகளுடன் கலந்தாலோசித்துள்ளார்.
அன்னூர் பகுதியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கபசுரக் குடிநீர் வழங்கியது போல, நம் கிராமத்திலும் வழங்கலாம் என அவர்கள் திட்டம் தீட்டினர். ஆனால், தினக்கூலிகளான அவர்களின் கையில், கிராமம் முழுமைக்கும் கபசுரக் குடிநீர் வழங்குமளவு நிதியில்லை.
இந்த திட்டத்தினை செயல்படுத்த, கவிப்பிரியா அவரது தந்தையிடம் ஆலோசித்தார். தனது கால் கொலுசை அடகு வைத்து கிடைக்கும் பணத்தைக்கொண்டு கபசுரக் குடிநீர் வழங்க அவரது தந்தையிடம் அனுமதி கோரினார். தாயை இழந்த கவிப்பிரியாவை, அவரது தந்தை மனம் நோகாமல் வளர்த்துவருகிறார். ஆதலால், இம்முறையும் கவிப்பிரியாவின் முடிவிற்கு ஆதரவு கரம் நீட்டி ஊக்குவித்தார்.
இது குறித்து பேசிய கவிப்பிரியா, “நான் நூற்பாலையில் வேலை செய்கிறேன். நான் வசிக்கும் பொன்னே கவுண்டன்புதூர் கிராமத்தில் பெரும்பாலானோர் கூலி வேலை செய்கின்றனர். அவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டால், விரைவில் ஊர் முழுக்க பரவும். அனைவரின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகிவிடும். அதனால், கிரம‘ததினருக்கு கபசுரக் குடிநீர் வழங்க என் தந்தையிடம் ஆலோசித்தேன். அவரால், அதிகளவில் பண உதவி செய்யமுடியவில்லை. அதனால், என் கொலுசை அடமானம் வைக்க, அவர் ஒப்புக் கொண்டார். மீண்டும் வேலைக்குச் செல்லும்போது, வாங்கிக் கொள்ளலாம் என என்னையும் தேற்றினார்” என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார், கவிப்பிரியா.
கொலுசை அடகு வைத்து கிடைத்த ஆயிரம் ரூபாய் பணத்தில், தன்னுடைய கிராம மக்களுக்கு மட்டுமில்லாது, சுற்றியுள்ள கிராம மக்களுக்கும் கபசுரக் குடிநீர் வழங்கிய கவிப்பிரியாவை பாராட்டும் விதமாக, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இந்த செய்தியை முகநூலில் பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து தற்போது கவிப்பிரியா அப்பகுதி மக்களிடையே பிரபலமாகி வருகிறார்.
இந்நிலையில், இவரது சேவை மனப்பாண்மை குறித்து அறிந்த திருப்பூரை சேர்ந்த துணிக்கடை உரிமையாளர் அன்வர், அவரது நண்பர் மூலம் கவிப்பிரியாவை தொடர்பு கொண்டு, அவரின் வங்கி கணக்கிற்கு ரூ. 2000 அனுப்பி அவரை வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தூய்மைப் பணியாளர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்களா?