கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு - கேரள எல்லைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், கேரள மாநிலத்திலிருந்து கோயம்புத்தூருக்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வரப்படும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்ட காய்கறி விலையேற்றத்தாலும், கரோனா குறித்த அச்சத்தாலும் குடும்பத்தினைக் காண வேண்டும் என்ற பதற்றத்தில் தமிழ்நாட்டு தொழிலாளர்கள் கேரளாவிலிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பிவருகின்றனர்.
பேருந்து, ரயில் சேவை என எதுவுமே இல்லாத காரணத்தால், நடை பயணமாகவே வீடு திரும்புகின்றனர். ஆனால், கரோனா பெருந்தொற்று பரவக்கூடாது என்பதற்காக அரசு அவர்களை கோயம்புத்தூர் நகரத்தினுள் அனுமதிக்கவில்லை.
அந்தத் தொழிலாளர்கள் கேராளாவிற்கே திருப்பி அனுப்பப்படுகிறார்கள். ஆனால், அறியாமையிலும், பிரச்னையின் தீவிரம் புரியாமலும் சில தொழிலாளர்கள் வனப்பகுதியிலுள்ள ரயில் பாதையில் நீண்ட தூரம் நடை பயணமாகவே கோயம்புத்தூர் வந்துசேர்கின்றனர்.
தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர், கோயம்புத்தூர் வந்த 25-க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு தொழிலாளர்களை பாலக்காட்டிலுள்ள முகாமிற்கு அனுப்பிவைத்தனர். இதுவரை தமிழ்நாடு தொழிலாளர்கள் 200 பேர் பாலக்காடு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: பெண் மருத்துவருக்கு கரோனா அறிகுறி; பணியாற்றிய மருத்துவமனைகளுக்கு சீல்!