கோவை மாவட்டம், சூலூர், காடம்படி ராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 54). இவர் விசைத்தறி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா (வயது 38). கடந்த இரு தினங்களுக்கு முன் மனைவியை அழைத்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் தங்கராஜ் பயணித்துள்ளார். அப்போது சாலையின் குறுக்கே பாம்பு ஒன்று சென்றுள்ளது.
இதனைக் கண்ட தங்கராஜ் பிரேக் அடித்ததில் கணவன் மனைவி இருவரும் தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது சாலையின் குறுக்கே சென்ற பாம்பு கவிதாவைக் கடித்துள்ளது. ஆனால் பாம்பு கடித்தது கவிதாவுக்கு தெரியாத நிலையில், கீழே தவறி விழுந்த கணவன், மனைவி இருவரும் எழுந்து தங்களது வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, மறுநாள் காலை கவிதாவிற்கு கையில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதி அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், கவிதாவின் கையில் விஷபாம்பு கடித்ததைக் கண்டறிந்த நிலையில், அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு செல்லும்படி அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து கவிதா கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சூலூர் காவல் துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க...நாயக்கர் கால சதிகல், நடுகல்... கடவுளாக வழிபட்ட மக்களுக்கு ஷாக்